சிவபெருமான் புண்டரீக மகரிஷியை காயத்தோடு (உடம்பு) தம்மிடம் ஏற்றுக் கொண்டதால் இத்தலம் 'காய ஆரோகணம்' என்ற பெயர் பெற்றது. பொதுவாக ஆன்மா தான் இறைவனிடம் சேரும். இங்கு உடம்போடு ஏற்றுக் கொண்டதால் இப்பெயர் உண்டானது. பின்னர் 'காரோணம்' என்று மருவியது. இத்தலத்து மூலவரும் 'காயாரோகணேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். ஏற்கெனவே மகரிஷி காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் ஆகிய தலங்களில் காரோண மூலவரை வழிபட்டிருக்கிறார். நாகர்கள் வழிபட்டதால் 'நாகப்பட்டினம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'காயாரோகணேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சற்று உயர்ந்த பாணத்துடன், லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். அவரது பின்புறம் சிறிய வடிவில் சிவபெருமான், பார்வதி திருமணக் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். அம்பாள் 'நீலாயதாட்சி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்பது போல் நாகை நீலாயதாட்சி என்பது வழக்கு.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் நாகாபரண விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, நவக்கிரகங்கள், அஷ்டபுஜ பைரவர், அஷ்டபுஜ காளி தேவி, மகாலட்சுமி, அதிபத்த நாயனார் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.
சிவபெருமான் ஏழுவகை நடனமாடிய சப்தவிடங்கத் தலங்களுள் இத்தலம் சுந்தர விடங்கத் தலம். இங்கு ஆடிய நடனம் பாராவார தரங்க நடனம். திருவாரூர், திருக்கோளிலி, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு, திருநள்ளாறு ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும்.
அம்பிகையின் 64 சக்தி பீடங்களுள் இத்தலமும் ஒன்று.
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரத் தலம் இது. மீனவக் குலத்தில் பிறந்த இவர் தாம் பிடிக்கும் மீனை இறைவனுக்கு அர்ப்பணித்து வந்தார். ஒரு சமயம் இறைவன் அவருக்குத் தங்க மீனை கொடுக்க, அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்து முக்தி அடைந்த தலம். ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று சுவாமி கடற்கரைக்கு எழுந்தருளி அதிபத்தருக்கு முக்தி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
கோரக்க சித்தரின் சீடரான அழுகுணி சித்தர் இங்கு அம்பிகையிடம் தமக்கு முக்தி அளிக்க வேண்டி வழிபட்டார். அம்பாளும், சிவபெருமானிடம் வேண்டவே, அவரும் சித்தருக்கு முக்தி அளித்தார். அவர் ஜீவசமாதி கோயிலுக்குள் உள்ளது.
தனது நாட்டிற்கு பஞ்சம் வராமல் இருக்க தசரத சக்கரவர்த்தி இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு, அவரது ஆலோசனையின்படி சனியையும் வழிபட்டுள்ளார். அதனால் இக்கோயிலில் நவக்கிரகங்கள் அனைத்தும் மூலவரை நோக்கியபடி உள்ளனர்.
இத்தலத்தில் சுந்தரர் இறைவனை வழிபட்டு, பொன்னும், நவமணிகளும் பெற்ற தலம்.
மார்க்கண்டேயர், அகத்தியர், வசிஷ்டர், கவுதமர், காசியபர், புலஸ்தியர், ஆங்கீரசர் ஆகியோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், திருநாவுக்கரசர் நான்கு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|